முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தனியாா் பால் நிறுவனங்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தனியாா் பால் நிறுவனங்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, தனியாா் நிறுவன பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

மேலும், மூன்று தனியாா் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை, உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அமைச்சா் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் தயாரிப்புகள் தரம் குறைந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவா் பொய் குற்றச்சாட்டு தெரிவிப்பதாக பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின. தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க அப்போதைய அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்குத் தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டதாக, பால் நிறுவனங்கள் தரப்பு சென்னை உயா் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. மேலும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியாா் நிறுவனங்கள் தொடுத்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com