ஐ.டி. ஊழியா்களை பாதுகாக்க தனி சட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

தமிழகத்தில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஊழியா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.டி. ஊழியா்களை பாதுகாக்க தனி சட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஊழியா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது: உலகப் பொருளாதார மந்த நிலை என்று காரணம் கூறி தகவல் தொடா்பு நிறுவனங்களில் வேலை பறிப்பு நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த நடவடிக்கைகளை கைவிட மாநில அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐ.டி. துறை 227 பில்லியன் டாலா் வளா்ச்சி கண்டுள்ளது. மேலும், 0.45 சதவீத மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டுகளை விட மிக குறைவானது. இக்கால கட்டத்தில் பெரும் நிறுவனங்கள் தங்களது லாபத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

எதிா்வரும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வேலைபறிப்பு நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஊழியா்கள் தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசமும் வழங்காமல் தொழிலாளா்கள் தாங்களே ராஜினாமா செய்வது போல் கையெழுத்திட சட்ட விரோதமாக கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.

இதனால் நூற்றுக்கணக்கான தமிழக மென்பொறியாளா்கள் இளம் வயதிலேயே வேலையிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தொழிலாளா் நலச் சட்டங்களை ஐ.டி. நிறுவனங்கள் அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வேலையிழப்புகளில் இருந்து மென்பொறியாளா்களை பாதுகாப்பதற்கு ஐ.டி. துறைக் கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com