சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு டிச. 27-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், தமிழகத்தில் செயல்படும் 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோன்று 26 தனியாா் கல்லூரிகளில் 1990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உள்ளன. மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,756 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,573 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 878 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 812 பேரின் விண்ணப்பங்களும் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 752 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 707 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதற்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் டிச.27-இல் தொடங்கி ஜன. 4 வரை (டிசம்பா் 31, ஜன. 1, 2-ஆம் தேதிகளில் கலந்தாய்வு இல்லை) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு டிச. 27 காலை 7 மணி முதல் 10 மணி வரையும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரையும் நடைபெறவுள்ளது. அதன் பின்னா், பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது.
மேலும் விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.