காப்புக் காடுகளையொட்டி சுரங்கப் பணிகளுக்கு அனுமதி! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

காப்புக் காடுகளை ஒட்டி சுரங்கப் பணிகளுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின்அறிவிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காப்புக் காடுகளையொட்டி சுரங்கப் பணிகளுக்கு அனுமதி! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு


கோவை: காப்புக் காடுகளை ஒட்டி சுரங்கப் பணிகளுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அறிவிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையிலிருந்து கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஓர் அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி காப்புக் காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை எவ்வித அகழ்வு மற்றும் சுரங்கத் தொழில் நடைபெறக்கூடாது என்கிற தடை தளர்த்தப்பட்டிருக்கிறது. புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடமிருந்து கோரிக்கை வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள 28 யானை வழித்தடங்களில் 17 யானை வழித்தடங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால் கர்நாடகத்திலும், கேரளத்திலும் இருப்பதைப்போல இல்லாமல் தமிழகத்திலுள்ள யானை வழித்தடங்கள் துண்டாடப்பட்ட வழித்தடங்களாகவே உள்ளன.

இந்நிலையில் அரசின் இந்த புதிய அறிவிப்பால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் சீரழிவதோடு, அங்குள்ள வனவிலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். புழுதிக் காற்றால் தாவரங்கள் பாதிக்கப்படும்போது உணவைத்தேடி வன விலங்குகள் அருகிலுள்ள ஊருக்குள் புகும். இதனால் மனித-விலங்கு மோதல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயமுள்ளது.

இதுதொடர்பாக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரும், தமிழக அரசு கானுயிர் கழகத்தின் உறுப்பினருமான கே.காளிதாசன் கூறியதாவது:

தமிழகத்தில் காடுகளை ஒட்டியுள்ள எல்லாப் பகுதிகளிலும் மனித - காட்டுயிர் முரண் நிலவுகிறது. தற்போது வனத்துறைக்குச் சொந்தமான நிலம் என்று வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமல்லாது காட்டை ஒட்டிய பிற பகுதிகளையும் வன விலங்குகள் பயன்படுத்தி வருகின்றன. நமது நிலப் பாகுபாடுகளை காட்டுயிர்கள் அறியாது.

அந்த இடங்களில் எவ்விதத் தடை ஏற்பட்டாலும் விலங்குகளின் இயல்பான வலசை பாதிக்கப்பட்டு அவை விளைநிலங்களுக்குள்ளும், மனித குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். குறிப்பாக யானைகளும், காட்டு மாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் வேளாண்மையும் பாதிக்கப்படும்.

காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றில் ஒரு கிலோமீட்டர் வரை சுரங்கப் பணிகளுக்கு உள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களில் பெரும்பாலும் காப்புக்காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. இவை தடைபட்டுவிடக்கூடாது. கோவை அருகே தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக காடுகளையொட்டி தோண்டப்பட்ட பெருங்குழிகளால் யானைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அங்கு சுரங்கப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது எல்லா இடங்களிலும் சுரங்கப் பணிகளுக்கு அனுமதித்திருப்பது வேதனைக்குரியதாகும்.

அதுபோலவே கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காடுகளை ஒட்டியுள்ள மலைகளைச் சிதைத்து கற்களும், மண்ணும் அண்டை மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் இனி சட்டரீதியாகவே தொடரும். எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலர் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எந்தவிதப் புரிதலும் இல்லை. இதனால்தான் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதைப் பின்பற்றியே தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளையும் என்பதால் இது கண்டனத்துக்குரியது. அந்தமான்-நிகோபார் தீவுகளிலுள்ள காப்புக் காடுகளை காரிடார் அமைப்பதற்காக தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக மத்திய பிரதேசத்திலுள்ள காப்புக்காடுகளை ஈடாக கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதிலிருந்தே மத்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை அறியலாம். எனவே, மத்திய அரசின் இந்த அறிவிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றார்.

அண்மையில் தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட வன விலங்கு சரணாலயங்களும் முன்பு காப்புக்காடுகளாக இருந்தவைதான். வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் போன்றவற்றில் மட்டுமே வன விலங்குகள் வசிக்கும் என்பது தவறான கருத்தாகும்.

எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதும், மனித-விலங்கு மோதலை அதிகரிக்கச் செய்வதுமான இந்த அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com