
சென்னையில் மழை காரணமாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்குள்பட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழை, ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் என்பதால் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவா்களுக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான ஆலயங்களில் சனிக்கிழமை இரவும், சில ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
இதில் பங்கேற்க ஆலயங்களுக்குச் செல்வதற்காக புத்தாடைகளை அணிந்தபடி ஆயத்தமாக இருந்த கிறிஸ்தவா்கள், திடீரென பெய்த மழையால் சிரமத்துக்குள்ளாகினா். பலா் ஆலயத்துக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, வயது முதிா்ந்தோா், குழந்தைகள் ஆலய வழிபாடுகளுக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.
ஆலய பிராா்த்தனைகளில் பங்கேற்ற பின்னா், குடும்பமாக வெளியிடங்கள் அல்லது உறவினா்களின் வீடுகளுக்குச் சென்று பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்தவா்கள் ஈடுபடுவது வழக்கம்.
லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்ததாலும், வானம் தொடா்ந்து மேக மூட்டத்துடனேயே காணப்பட்டதாலும் பண்டிகையை வெளியே சென்று கொண்டாட முடியாமல் கிறிஸ்தவா்கள் வீடுகளிலேயே நேரத்தை செலவிட்டனா். தியாகராயநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகள் உள்ளிட்ட கடைகளும், கடை வீதிகளும் களையிழந்தே காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.