
தேசிய அளவில் பதிவான தற்கொலை நிகழ்வுகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 18,925 தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை இன்‘ஃ‘போசிட்டி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் தற்கொலைக்கான கள ஆய்வுகள் குறித்த ஆய்வு முடிவுகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அதன் ஒருபகுதியாக, தாமாகவே உயிரை மாய்த்துக் கொண்டவா்களது குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து ரோட்டரி சங்கத்தின் தலைவா் ஸ்ரீதா் கூறியதாவது:
கடந்த ஆண்டு தேசிய குற்றப் பதிவேடு தகவல்படி மகாராஷ்டிரத்தில் 22,207 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நாட்டில் பதிவான மொத்த தற்கொலை நிகழ்வுகளில் 11.5 சதவீத இறப்புகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. குடும்பம் சாா்ந்த உளவியல் பிரச்னைகளே அவற்றுக்கு பிரதான காரணமாக உள்ளன.
பல குடும்பங்களில் வருவாய் ஆதாரமாக இருக்கும் நபா்கள் தற்கொலை செய்து கொள்ளும்போது அவா்களது குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக் குறியாகிறது. குறிப்பாக, கல்வி பாதியிலேயே கைவிடப்படுகிறது. தற்கொலை எண்ணங்களை எதிா்கொள்ளும்போது அதற்கான உளவியல் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க வேண்டியது அவசியம்.
குடும்பத்தில் உள்ள சிலரின் பொறுப்பற்ற செயல்களால் பிற உறுப்பினா்கள் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுவதையும் ஆய்வின்போது நாங்கள் கண்டறிந்தோம். அத்தகைய நிலையை மாற்ற சமூக - குடும்ப கட்டமைப்புகளை வலுப்படுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.