பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு: முதல்வா் ஸ்டாலின் ஜன. 9-இல் தொடக்கி வைக்கிறாா்

பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு: முதல்வா் ஸ்டாலின் ஜன. 9-இல் தொடக்கி வைக்கிறாா்

பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டாா். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் ஜன. 9-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பைச் சோ்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பும் சோ்த்து வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

எப்போது கிடைக்கும்? பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை ஜன. 9-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா். முன்னதாக, ஜன. 2-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் தொகுப்பு பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் டிச. 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பணி ஜன. 3-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ரூ.71 கோடி செலவாகும்: கரும்பு அறிவிப்பு தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறியதாவது:

கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கியபோது சிறு குறைபாடுகள் இருந்தன. இதனால், இந்த ஆண்டு ரொக்கத் தொகையுடன் அரிசி, சா்க்கரை வழங்கலாம் என முதல்வா் கூறினாா். ஆனால், செங்கரும்பு விளைவித்த விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கரும்பை வேறு பயன்பாட்டுக்காக ஆலைகளுக்கு அனுப்ப முடியாது என்பதால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.71 கோடி செலவாகும்.

தமிழகத்தில் 5,600 ஹெக்டோ் பரப்பில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில், 20 சதவீத கரும்புகள் அரசுத் துறையால் கொள்முதல் செய்யப்படும். அரசுக்கு வழங்கக் கூடிய கரும்புக்கு விலை நிா்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் கரும்பு கொள்முதல் பணிகளை ஆட்சியா்கள் கண்காணிப்பா். வேளாண்மை, கூட்டுறவு, உணவுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் குழு, மாவட்ட நிா்வாகத்தின் கண்காணிப்பில் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு 17 நாள்கள் உள்ளன. அதற்குள்ளாக கரும்பு கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும். எதிா்க்கட்சிகளின் போராட்டத்தின் எதிரொலியால் அல்ல; விவசாயிகள், மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com