ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர் 

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக. இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!

ஓ.பன்னீர் செல்வம்

மலரும் புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தை சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இறைவனின் அருளோடு நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற்று உற்சாகமாக வாழ எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ், பாமக நிறுவனத் தலைவர்

நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப் படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும். நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. இனி மலர்ப்பாதையில் தான் நாம் பயணிக்கப் போகிறோம். அதன் பயனாக 2023-ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 

நம் நாடு சுதந்திரதின பவளவிழாவை கொண்டாடி முடித்துள்ள நிலையில் விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலால் உருவான மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, இறையாண்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றை  இந்திய மக்கள் பாதுகாப்பதற்கு முன்னேறிச் செல்லும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமையட்டும் என நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சமூகத்தில் தொடர் கொந்தளிப்பை உருவாக்கி, பெரும் மனித உயிர் சேதாரங்களை ஏற்படுத்தி வரும் கேடு நிறைந்த சூழல் அழிந்து, அனைவரும் கூடி வாழும் நல்லிணக்க சூழலை உருவாக்க,  ஜனநாயக இடதுசாரி, மதச்சார்பற்ற, மனித நேய சக்திகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் வெற்றி பெறும்  ஆண்டாக  2023 ஆம் ஆண்டை அமைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றுபடுவோம்.

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து.

கே.எஸ். அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

அவலநிலைகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள்அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

ஆங்கில புத்தாண்டு பிறக்கும் சூழ்நிலையில் உலக பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு மந்த நிலையில் இருக்கிறது. அதில் நாம் சிக்கி கொள்ளாமல் மீள வேண்டுமென்றால் அதிகமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான தைரியத்தையும், மன உறுதியையும் இறைவன் கொடுக்க வேண்டுமொன்று வேண்டிக்கொள்கிறேன். அதற்கான உடல் வலிமையையும், மன உறுதியையும் பெற்று உழைப்பை கூடுதலாக்கி வாழ்க்கையில் முன்னேற இந்த புத்தாண்டு வழி வகுக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com