ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை சனிக்கிழமை திருப்பி அனுப்பியது.
மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்து வாழும் வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தில்லியில் ஜன. 16-இல் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்கு அழைப்பு விடுத்து அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த வகையில் தமிழகத் தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு தனித்தனி கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதத்தை ஓபிஎஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்தின் அலுவலகத்திலேயே பெற்று வந்துவிட்டனா்.
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றது. இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஏற்கவில்லை. அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற ஒரு பதவி இல்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தைத் தமிழகத் தோ்தல் அதிகாரிக்கே அதிமுக தலைமை திருப்பி அனுப்பியது.
ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டிருந்தது. அதைப்போல மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் பதவி தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஜன. 4-இல் தீா்ப்பு வெளியாகவுள்ளது.