தமிழகத்தின் தியாக தீபங்கள் - 170: பி.ராமசாமி

ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் கருப்பராயம்பாளையம் எனும் கிராமத்தில் 12-4-1919-இல் பிறந்தவர் பி.ராமசாமி. திருப்பூர் இவரது அரசியல் களம்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 170: பி.ராமசாமி


ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் கருப்பராயம்பாளையம் எனும் கிராமத்தில் 12-4-1919-இல் பிறந்தவர் பி.ராமசாமி. திருப்பூர் இவரது அரசியல் களம்.
வறுமை காரணமாக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி பண்ணை வேலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோவை ரங்கவிலாஸ் மில் தொழிலாளியானார். அப்போது ஏற்பட்ட தொழிற்சங்கத் தொடர்பில் கம்யூனிஸ்ட் இதழான "ஜனசக்தி'யை விற்பனை செய்ததால் நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.
1933-இல் திருப்பூரில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தனலட்சுமி மில்லின் தொழிலாளியாக 14 வயதில் சேர்ந்தார். தொழிற்சங்கவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டார்.
6-2-1934-இல் காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது அவரை நேரில் பார்த்துப் பரவசப்பட்டார். சொந்த ஊரான கருப்பராயம்பாளையத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டியையும்,  "ஜவாஹர் தேசிய வாலிபர் சங்கம்' என்ற இளைஞர் அமைப்பையும் தோற்றுவித்தார். கிராம காங்கிரஸ் செயலாளராகவும் விளங்கினார்.
1936-இல் இருந்து விடுதலைப் போராட்ட இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
1938-இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்த கம்யூனிஸ்டுகள் அதிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கவும் தொழிற்சங்கங்களை உருவாக்கவும் முக்கியப் பங்களிப்புச் செய்தார்.
இரண்டாம் உலக போர்க் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டம் நடத்தியதால் கம்யூனிஸ்ட் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டிருந்தது.  தலைமறைவு வாழ்க்கையை ராமசாமி மேற்கொண்டார். 1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
கொடிகாத்த குமரனின் 40-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 4-10-1944-இல் திருப்பூரில் திரளானோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தையும் நடத்தினார்.
திருப்பூரில் குமரன் நினைவாக ஓர் இயக்கம் நடந்தது அதுவே முதல்முறை. 5,000 மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். அடக்குமுறையைக் கண்டித்தும் தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரு தியாகத்தை வைத்து இயக்கம் நடத்தி பலரை தியாகத்திற்குத் தயாராக்கினார். ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் மேத்யூ,  ராமசாமியைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கினார்.
பொள்ளாச்சி, கடலூர், வேலூர் சிறைகளில் 6 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.  23-1-1947 முதல் 7 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல தொழிற்சங்கங்களை அமைத்து அவற்றின் மூலம் பல்லாயிரம் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களை விடுதலைப் போர்க்களத்தில் வீறுகொண்டு எழச்செய்தவர்.
நாட்டு விடுதலைக்குப் பின்னரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி 10-12-1948-இல் கைதாகி 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறையிலிருந்தார்.
பல்லாண்டுகள் "தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி' என்ற தியாகிகளின் நலன் காக்கும் பேரமைப்பின் தலைவராக விளங்கிய பி.ராமசாமி, 26-1-2006-இல் 87-ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com