தமிழகத்தின் தியாக தீபங்கள் - 171: ஏ.தேவராஜ ஐயங்கார்

ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டம், சோளிங்கரில் 15}4}1902}இல் பிறந்தவர் ஏ.தேவராஜ ஐயங்கார்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 171: ஏ.தேவராஜ ஐயங்கார்

ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டம், சோளிங்கரில் 15}4}1902}இல் பிறந்தவர் ஏ.தேவராஜ ஐயங்கார்.
தேசியத் தலைவர்களின் வீரியமிக்க உரைகளைக் கேட்டும், இதழ்களில் வெளிவந்த உரைகளைப் படித்தும் மிக இளவயதிலேயே தேசபக்தியை வளர்த்துக் கொண்டார்.
காந்தியடிகள்,  மூதறிஞர் ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களின் அறிவுறுத்தலால் அக்ரஹாரத்தை விட்டு ஹரிஜனங்கள் வாழும் பகுதிகளில் அதிக நேரத்தைக் கழித்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் உளப்பூர்வமாகப் பங்கேற்றார்.
மிகவும் ஆசாரசீலரான ஐயங்காரின் தந்தை அப்பாதுரை ஐயங்கார் மகனின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்தார். ஒரு கட்டத்தில் இதன் பொருட்டே தந்தையும் மகனும் பிரிய நேர்ந்தது.
தந்தையிடமிருந்து பெற வேண்டிய பூர்விகச் சொத்துகளை இழந்தார். தான் அணிந்திருந்த பூணூலையும் அகற்றினார்.
1917}இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் இவரை விடுதலை இயக்கங்களில் ஈடுபடத் தூண்டியது. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா,  தீரர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகிய இருவரின் ஆழமான உரைகள் ஐயங்காரின் அரசியல் அறிவை விசாலப்படுத்தின.
1920}இல் மூதறிஞர் ராஜாஜி ஓர் அரசியல் பள்ளியை நடத்தினார். கே.சந்தானம், எஸ்.ராமநாதன் உள்ளிட்ட அரசியலில் ஆழம் கண்ட தேசியத் தலைவர்கள் இந்தப் பள்ளியில் வகுப்பெடுத்தனர். ஐயங்கார் இந்தப் பள்ளியில் சேர்ந்து அரசியல் பாடங்களை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார்.
சென்னை சரஸ்வதி சங்கம் நடத்தி வந்த சர்க்கா (ராட்டை) பிரசாரத்தில் இணைந்து செயல்பட்டார்.  
வாலாஜா தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகிய பொறுப்புகள் வகித்துள்ளார். அப்போது தடை உத்தரவை மீறி மூதறிஞர் ராஜாஜியுடன் பிரசாரங்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
பெரியார் ஈ.வெ.ரா. காங்கிரஸில் இருந்தபோது அவருடன் இணைந்து கதர் விற்பனை செய்துள்ளார். ஐயங்காரின் தீண்டாமை ஒழிப்புப் பணியை வெகுவாகப் பாராட்டியுள்ளார் பெரியார் ஈ.வெ.ரா. ஏழை, எளிய மக்களை அழித்தொழிக்கும் குடிப்பழக்கத்துக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்கிப் பல வகைகளில் செயல்பட்டுள்ளார்.
ஜாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான தனது வேகமான நடவடிக்கைகளால் சொந்த ஜாதியினரின் கண்டனத்துக்கும் கூட்டுப் புறக்கணிப்புக்கும் ஆளானார். ஜாதி வெறியர்களால் ஹரிஜன மக்களின் குடிசைகள் இடிக்கப்பட்டபோது தனது மனைவியின் நகைகளை விற்று மாற்றுக் குடிசைகள் கட்டிக் கொடுத்தார்.
1939}இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறைத் தண்டனை பெற்று அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
1942}இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதாகி வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தடுப்புக் காவல் கைதியாக 2 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார்.
தீண்டாமை ஒழிப்பு வாழ்நாள் பணிக்காக 1966}இல் ஐயங்காருக்கு தங்கப் பதக்கம் வழங்கி தமிழக அரசு கெüரவித்தது. தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் ஓயாது உழைத்த ஐயங்கார் 1979 அக்டோபரில் 77}ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com