தெலங்கானாவில் ராமானுஜர் பொற்சிலைத் திறப்பு: ஸ்டாலின் வாழ்த்து

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ராமானுஜர் பொற்சிலைத் திறப்பு: ஸ்டாலின் வாழ்த்து
தெலங்கானாவில் ராமானுஜர் பொற்சிலைத் திறப்பு: ஸ்டாலின் வாழ்த்து

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில், திரு. த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் அவர்கள் சந்தித்து, தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து, இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர், த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில், இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்தச் சீரிய தருணத்தில், இராமானுஜரின் சமத்துவக் குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம், அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். தமிழக முதல்வராகவும், திமுக தலைவராகவும் தன் வாழ்நாளெல்லாம் சமத்துவத்துக்காகப் பாடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதினார். அவரது இலக்கிய - திரைப் படைப்புகளில் இதுவே இறுதியானதாகும். அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் திரளிடம் இராமானுஜர் என்னும் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.

கருணாநிதியின் அடியொற்றித்தான் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு தற்போது நடைபெற்று வருகிறது என்பதனையும் நான் இத்தருணத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமானுஜர் பரப்பிய சீர்திருத்தங்கள் எங்களது நெஞ்சுக்கும் நெருக்கமானவைதாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான், அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து, தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையில் பூசை செய்வதில் சமத்துவத்தை உறுதிசெய்துள்ளது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில், மாநிலத்தில் கோயில்களின் நிர்வாகம் முறையாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவையான நிதியினை ஒதுக்கியிருப்பதோடு - கோயில் பூசாரிகளின் நலன்களையும் காத்து வருகிறோம். இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில்தான் பக்தர்களும் அர்ச்சகர்களும் பயன்பெறும் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டிலேயே மிகச் சிறப்பான கோயில் நிர்வாகத்தினைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

தங்களது நிகழ்வு பெரும் வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் இராமானுஜரின் 'சமத்துவ சிலையானது' என்ற இந்த அடையாளம் தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com