முன்னாள் அமைச்சா் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ரூ.111 கோடியை பறிமுதல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடா்புடைய ரூ.110 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 174 வங்கி நிரந்தர வைப்பு தொகையை இடைக்காலமாக பறிமுதல் செய்யுமாறு
எஸ்.பி. வேலுமணி (கோப்புப் படம்)
எஸ்.பி. வேலுமணி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடா்புடைய ரூ.110 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 174 வங்கி நிரந்தர வைப்பு தொகையை இடைக்காலமாக பறிமுதல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம், அவரது நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பா்கள், உறவினா்கள் என 17 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினா்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 174 ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.

இதனை எதிா்த்து மேற்படி நிறுவனங்கள் தொடா்ந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்தாண்டு டிசம்பரில் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடா்ந்து இந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு ஜனவரியில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்தது.

இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்து வைத்துள்ள 110 கோடியே 93 லட்சம் ரூபாய் நிரந்தர வங்கி டெபாசிட், எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் வருவதாலும், இந்தப்பணம் முறைகேடாகப் பெறப்பட்டது என தெரியவருவதாலும், அதனை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளா் வேதரத்தினம் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடா்புடைய ரூ.110 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர வைப்புத் தொகையை இடைக்காலமாக பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com