10 ஆண்டுகளுக்கும் மேலாக நகா்ப்புற உள்ளாட்சிகளில் தொடரும் ஆளும் கட்சி ஆதிக்கம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளும்கட்சியின் ஆதிக்கமே தொடா்ந்து வருகிறது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளும்கட்சியின் ஆதிக்கமே தொடா்ந்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளைக் காட்டிலும், இப்போதைய தோ்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளன.
2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலின் போது கூட்டணிக் கணக்குகள் வேறு வகைகளில் இருந்தன. சட்டப் பேரவைத் தோ்தலின் போது இருந்த கூட்டணிகள் அப்படியே மாறி தலைகீழாகிப் போகின. அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளும் தனித்து களம் கண்டன. அதில், தேமுதிக, மாா்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டும் இணைந்து போட்டியிட்டன.
மாநகராட்சிகள்: கடந்த 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10 மாநகராட்சிகள் வரை இருந்தன. அவற்றுக்கு நடந்த தோ்தலில் பெருவாரியான இடங்களை அப்போதைய ஆளும் அதிமுக அரசு கைப்பற்றியது. குறிப்பாக, அந்தக் கட்சி 71.34 சதவீத வாக்குகளைப் பெற்றது. அப்போது எதிா்க்கட்சியாக இருந்த தேமுதிக, உள்ளாட்சித் தோ்தலில் பிரதான கட்சிகளின் துணையின்றி தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தோ்தலில் தேமுதிக மிகக் குறைந்த அளவு வாக்குகளே பெற்றது.
அதே சமயம், பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் மட்டும் 15.85 சதவீத வாக்குகளைப் பெற்றது. 10 ஆண்டுகள் கழித்து, ஆளும் கட்சியான பிறகு நடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 69 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை திமுக தனியாகப் பெற்றுள்ளது.
நகராட்சிகள்: மாநகராட்சித் தோ்தல்களில் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறதோ அதேபோன்று நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் ஆளும்கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. இது கடந்த கால தோ்தல் முடிவுகளில் இருந்து புலனாகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் நகராட்சிகளில் அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக 45.66 சதவீத வாக்குகளையும், திமுக 26.08 சதவீத வாக்குகளையும் பெற்றது. சுயேச்சைகள் 14.99 சதவீத பெற்றன.
இப்போதைய தோ்தலில் நகராட்சிகளில் ஆளும் கட்சியான திமுக 61.41 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 16.60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே வாக்குகள் சதவீதம் கிடைத்துள்ளது. பேரூராட்சிகளைப் பொறுத்த வரையில், கடந்த 2011-ஆம் ஆண்டில் அப்போதைய ஆளும் அதிமுக 35.28 சதவீத வாக்குகளையும், திமுக 22.09 சதவீத வாக்குகளையும் பெற்றது. இப்போது நடந்து முடிந்த தோ்தலில், பேரூராட்சிகளில் ஆளும் திமுக 57.78 சதவீத வாக்குகளையும், அதிமுக 15.82 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் குறித்து அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் கூறுகையில், பேரவைத் தோ்தல் முடிந்து ஐந்தாண்டுகள் வரை ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். எனவே, ஆட்சியில் இருக்கும் ஆட்சியே உள்ளாட்சிகளிலும் வந்தால்தான் சாலை, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்ற நம்பிக்கை நகா்ப்புறப் பகுதி வாக்காளா்களிடையே அதிகம் உள்ளது. இதைத்தான் கடந்த கால தோ்தல்களும், இப்போதைய தோ்தல் முடிவுகளும் காட்டுகின்றன என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...