அரியலூர்: அரியலூர் நகராட்சியை சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.
பல வரலாற்றுகளைக் கொண்ட அரியலூரை ஒப்பில்லாதமழவராயர் ஜமீன் ஆண்டு வந்தார். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்த ஜமீன்முறை ஒழிக்கப்பட்டதையடுத்து, அரியலூர் வருவாய் கிரமமாக 23.7.1886-இல் அறிவிக்கப்பட்டது.
21.12.1943-இல் 2 ஆம் நிலை பேரூராட்சியாகவும், 1.1.1955- இல் முதல் நிலை பேரூராட்சியாகவும், 1.4.1966 - இல் முதல் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், அதன் பிறகு 1.10.2004- இல் சிறப்பு சிற்றூராட்சியாகவும், 16.12.2004- இல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 9.8.2010- இல் இராண்டாம் நிலை நகராட்சியாகவும் தமிழக அரசு அறிவித்தது.
18 வார்டுகளைக் கொண்ட அரியலூர் நகராட்சியில், முதல் தலைவராக அதிமுக- வைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். கண்ணன் 2001- 2006 வரை பதவி வகித்தார். அதன்பிறகு 2006 - 2011 வரை விஜயலட்சுமி(திமுக), 2011- 2016 வரை முருகேசன்(திமுக) ஆகியோர் பதவி வகித்தனர்.
இதையடுத்து அரியலூரில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 16 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டது. திமுக அதிருப்தி வேட்பாளர்கள் 18 பேரும் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதிமுக 18 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக, அதிமுக தலா 7 இடங்களில் வென்று சமபலத்துடன் உள்ளன. 4 இடங்களில் வென்ற சுயேச்சைகளில் ஒருவர் மதிமுக, மற்றவர்கள் திமுக- வைச் சேர்ந்தவர்களாவர். இங்கு திமுக, அதிமுக- வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணமாக எண்ணிக்கையில் சமமாக உள்ளது.
அதிமுக- வில் சொல்லும்படியாக பெரும் தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. ஆனால், தனி ஆளாக முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வீடு வீடாகச் சென்று அதிமுகவுக்கு வாக்கு கேட்டார். திமுகவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே திறந்த வேனில் நின்றவாறு வாக்கு கேட்டார். அரியலூர் நகராட்சிப் பகுதிகளில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட இந்த தேர்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளே கிடைத்துள்ளது.
காரணம் அதிமுக ஆட்சியில் அரியலூரில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முடித்தது.
ஆனால், திமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 9 மாத திமுக ஆட்சியில் அரியலூரில் எந்தவித திட்டப் பணிகள் தொடங்காதது. பேருந்து நிலையம் கட்டப்படாதது, நகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பன பல உள்ளிட்ட பிரச்னைகளும், திமுகவினரே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டதும் போன்ற காரணங்களாகும்.
நகர்மன்றத் தலைவர் பதவி: அரியலூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பெண்களுக்கு(பொதுப் பிரிவு) ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 7 இடங்களைப் பிடித்துள்ள திமுகவுக்கு, சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற திமுக- வைச் சேர்ந்த 3 பேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளதால் அரியலூர் நகராட்சியை சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக கைப்பற்றியுள்ளது. தலைவர் பதவிக்கு 5 ஆவது வார்டில் போட்டியிட்டு வென்ற க.சாந்தி, 6 ஆவது வார்டு ரா.ரேவதி, 15 ஆவது வார்டு ச.ராணி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.