தொன்மையான தமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது: ராகுல் காந்தி உரை

தமிழ் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது: எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

தொன்மை வாய்ந்த தமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழர்களிடம் அன்பாகப் பழகினால் எதையும் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தன்வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன்'  புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார். பின்னர் பேசிய ராகுல் காந்தி, 

எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் அருமையான புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலகட்டப் போராட்டங்களைக் கடந்தது அவரது வாழ்க்கை. அந்த போராட்டத்தில் வாயிலாக தமிழக மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வருகிறார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 69 வயதாகியது என்றால் எனது தாயார் நம்பவில்லை. அவர் எப்படி இளமையுடன் இருக்கிறார் என்பது குறித்து அடுத்த புத்தகத்தை எழுத வேண்டும். 

தமிழ் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் உடையது தமிழ். என்னை அறியாமலேயே பலமுறை தமிழகத்தைப் பற்றி மக்களவையில் பேசியுள்ளேன். 

என்னுடைய ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது. கடந்த 3,000 ஆண்டுகளாக யாராலும் எதையும் தமிழகத்தில் திணிக்க முடியவில்லை. 

தமிழகத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களிடம் அன்பாக பேசினால் எதையும் பெறலாம்.  நான் தமிழன் என்று அழைத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளதாகக் கருதுகிறேன். நான் இங்கு வரும்போதெல்லாம், பணிவான குணத்தை கற்றுக்கொண்டேன். தமிழக வரலாற்றுக்கு, பாரம்பரியத்திற்கு தலை வணங்குபவனாக ஒவ்வொரு முறையும் தமிழகம் வருகிறேன்.

மாநிலம் என்றால் என்ன?

மக்களிடமிருந்து மண்ணின் தன்மை வருகிறது. மக்களிடமிருந்து குரல் வருகிறது. குரலில் இருந்து மொழி வெளிவருகிறது. மொழியிலிருந்து கலாசாரம் வருகிறது. கலாசாரத்திலிருந்து வரலாறு வருகிறது. வரலாறு மாநிலமாக உருவாகிறது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். எனில், மாநிலங்களிலிருந்துதான் இந்தியா உருவாகிறது. 

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவிற்கு வலிமை கொடுக்கிறது. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று யாரோ தீர்மானிக்கிறார்கள். அதைச் செய்ய நீங்கள் யார்?.

பிரதமர் இங்கு வரும்போதெல்லாம், எதையாவது திணிக்கப் பார்க்கிறார். அவர் இங்கு உள்ள மக்களைப் பற்றி எதையும் புரிந்துகொள்வதில்லை. மக்களைப் புரிந்துகொள்ளாமல், அவர்களது குரலாக ஒரு தலைவனால் எப்படி பேச முடியும்?.

ஜிஎஸ்டி நியாயமற்றது என்று தமிழகம் வெளிப்படையாக எதிர்த்தது. ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டையும் தெரிந்துகொள்ளவில்லை. தமிழர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவில்லை.

ஆனால் எனக்கு தமிழக மக்களுடன் அனுபவம் உள்ளது. அவர்களுடன் அன்போடு, மரியாதையோடு பழகினால் எதையும் பெறலாம். ஆனால் எதையும் திணிக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசினார்.

உரிமைகள் பறிப்பு:

விடுதலைப் பெற்ற நாட்டில் இன்றுதான் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு எப்போதும் நடந்ததில்லை. மக்களின் உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. 

குஜராத், உத்தரப் பிரதேசத்திலுள்ள அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீரை ஆட்சிசெய்துகொண்டுள்ளனர். பஞ்சாபில் உள்ள நூற்றுக்கணக்கான மைல்கல் இடத்தை எடுத்து எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வழங்கியுள்ளனர். அதற்காக எதையும் யாரிடமும் கேட்கவில்லை. இதையேத்தான் தமிழகத்திற்கும் செய்கிறார்கள்.

இந்தியா என்பது பல்வேறு மொழி, கலாசாரங்களைக் கொண்டது. வரலாற்று ரீதியாக இது இந்தியாவிற்கு பலம். எங்கள் ஒட்டுமொத்த கருத்து வேற்றுமையில் ஒற்றுமை. இந்தியாவை ஒட்டுமொத்த மக்களும் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் யாரோ சிலர் இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com