மீண்டும் மஞ்சப்பை சாத்தியமா?

ஜவுளிக் கடைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் நான்-ஓவன் பைகள், வெர்ஜின் (புதிய)பைகளுக்கு தடை விதித்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே,
மீண்டும் மஞ்சப்பை சாத்தியமா?

ஜவுளிக் கடைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் நான்-ஓவன் பைகள், வெர்ஜின் (புதிய)பைகளுக்கு தடை விதித்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை சாத்தியமாகும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், பாலி எத்திலீன் டெரஃப்தலேட், ஹை-டென்சிட்டி பாலி எத்திலீன், பாலிவினைல் குளோரைடு, லோ-டென்சிட்டி பாலி எத்திலீன், பாலி புரோப்லீன், பாலிஸ்ட்ரீன், அக்ரிலிக், பாலி கார்பனேட், பாலி ஆக்டிக் போன்ற நெகிழி வகைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. ஆனால், சுமார் 2 மாதங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழகத்தில் நெகிழிப் பை உற்பத்திக்கு தீவிர தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து 50 மைக்ரானுக்கு குறைவான நெகிழிப் பைகள் தடையின்றி வரத் தொடங்கின. அதைக் கண்காணிக்கவும், தடுக்கவும் தவறிய நிலையில், நெகிழி தூக்குப் பைகளுக்கு (பாலித்தீன் கேரி பேக்) மாற்றாக, கண்ணாடி நெகிழிப் பைகளை (பாலி புரோப்லீன் வகை) வணிகர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அதுவரை, சில்வர் பாத்திரங்களையும், மஞ்சப்பைகளையும் கையில் எடுத்த நுகர்வோரும் மீண்டும் பழைய நிலைக்கு மாறினர்.
மீண்டும் நெகிழிப் பை ஒழிப்பு: 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை சில நாள்களுக்கு முன் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி அமைப்புகள் நெகிழிப் பை பயன்பாடுகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.
ஆனாலும், அந்த நடவடிக்கை தீவிரமாக்கப்படாமல், மென்மை போக்கை கடைப்பிடிப்பதால் நெகிழி ஒழிப்பு நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. 90 சதவீத மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, 10 சதவீத விற்பனையாளர்களிடம் தீவிரம் காட்டினால் மட்டுமே நெகிழிப் பைகளை ஒழிக்க முடியும் என்பதுதான் அனுபவபூர்வ உண்மை.
ஜவுளிக் கடைகளில் மீண்டும் துணிப்பை: தமிழகத்திலுள்ள ஜவுளிக் கடைகளில் கால் நூற்றாண்டுக்கு முன்பே நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு வாங்கப்படும் பட்டு ஆடைகளை, மஞ்சப் பையில் வைத்து வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் இடையிலான நேரடித் தொடர்பு குறைந்ததன் எதிரொலியாக, மஞ்சப்பை பயன்பாடு முழுமையாகக் கைவிடப்பட்டது. நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நெய்யப்படாத துணி (நான்-ஓவன் பேக்) என்ற பைகளையே ஜவுளிக் கடைகள் பயன்படுத்தி வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை மட்டுமே விநியோகிக்க ஜவுளிக் கடைகளை கட்டாயப்படுத்த வேண்டும் என, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு துணிப் பை: இது தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர் கே. மணிவண்ணன் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடையேயும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. குடிநீர் புட்டி முதல் புத்தகங்களுக்கு உறையிடும் அட்டை வரையிலும் நெகிழிப் பொருள்களாக உள்ளன. அரசுத் தரப்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் புத்தகப் பைகளை, தோளில் மாட்டிச் செல்லக்கூடிய வகையில் துணிப்பைகளாக வழங்குவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: 3 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நெகிழிப் பை தயாரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர், வெளிமாநிலங்களிலிருந்து நெகிழிப் பைகள் வரத் தொடங்கின. சில மாதங்களில் நெகிழி ஒழிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதை அடுத்து, தமிழகத்திலுள்ள உற்பத்தியாளர்கள் கைப்பிடி இல்லாத கண்ணாடி நெகிழிப் பைகளின் (பாலிபுரோப்லீன்) தயாரிப்புப் பணிகளில் தீவிரமடைந்துவிட்டனர்.
ஜவுளிக் கடைகளில் துணிப்பைகள் வழங்கப்படுமானால், பொதுமக்களிடையே துணிப்பைகளின் பயன்பாடு எளிதாகிவிடும். அதற்கான வாய்ப்புகள் குறித்தும், உணவகங்கள், இனிப்பு விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்கள் வெர்ஜின் பைகளை பயன்படுத்தி வருவதை தடுத்து, அங்கும் துணிப் பைகளை ஊக்கப்படுத்தலாம். துணிப்பைகளின் புழக்கம் அதிகரித்தால், நெகிழிப் பைகளை பொதுமக்களும் இயல்பாகவே தவிர்க்கத் தொடங்குவார்கள் என்றனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com