எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105- வது பிறந்த நாள்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப்பிட்டியில். 1917ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 17இல் பிறந்தார்.

தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்களின் வாயிலாகத் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. 

அவர் நடித்த பல படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘இதயக்கனி‘ என்றும், கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே பின்னாளில் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது. அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, அவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் காந்தியவாதியாகத் திகழ்ந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞப் பெருந்தகை ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953ஆம் ஆண்டு தன்னைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்புத்திட்டத் துணைத்தலைவராக, 1967ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக, 1969இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, கருணாநிதியின் உற்ற நண்பராகத் தனது அரசியல் வாழ்வினைத் தொடங்கியவர், பின்னாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற தனி இயக்கம் கண்டு, 1972ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை. 

அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் கருணாநிதியுடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். அன்னாரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், கருணாநிதி,  17.01.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்“ என்று நட்புணர்வோடு குறிப்பிட்டார். மேலும், சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அன்னாரின் திருவுருவச்சிலையினையும் 1998ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.

முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், அன்னாரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com