
நாட்டின் 73 ஆவது குடியரசு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் உருவப் பதாகைகள் கொண்ட ரத ஊர்வலம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் ரத ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத ஊர்வலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வ. உ. சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், மதுரகவி பாஸ்கரதாஸ், வீரன் வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்களது உருவப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
ரத ஊர்வலம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம், கரிசல்குளம், விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, எட்டயபுரம், தாப்பாத்தி, தாப்பாத்தி முகாம், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, ரகுராமபுரம், வவ்வால் தொத்தி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்றன. அங்கு பொதுமக்களிடம் சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் நாட்டுக்காக பாடுபட்ட தியாக சீலர்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
குடியரசு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட நாகலாபுரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.