மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். 
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
Published on
Updated on
2 min read

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். 

இந்த சுங்கச் சாவடியை அகற்றவேண்டும் என பொதுமக்கள் போராடி வரும் சூழலில், தற்போது, கப்பலூா் சுங்கச்சாவடியை பயன்படுத்தும் கட்டண விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகன உரிமையாளா்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனம் சாா்பில் வழக்குரைஞா்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனா். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.

இது குழப்பத்தையும், திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளா்களுக்கு மனஉளைச்சலையும், வேதனையையும் அளித்துள்ளது.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கண்டனம் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், திருமங்கலம் ,கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை  அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். 

இந்நிலையில் திங்கள்கிழமை காலை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது அங்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. எனவே, பந்தல் அமைக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் உள்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். 

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது தொண்டர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளு சம்பவமும் நடைபெற்றது. இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . 

இதையடுத்து அதிமுக தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பேருந்துகளில் ஏற்றினர். தொடர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். 

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்னை எழுப்பி வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் மற்றும் கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு ஆண்டு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென வழக்குரைறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது திருமங்கலம் பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு திருமங்கலம் நகர் பேருந்துகள் ரூ.28 கோடி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சுங்கச்சாவடி அகற்ற மக்களிடம் கையெழுத்து பெரும் அமைதியான போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால். காவல்துறை அதற்கு அனுமதி மறுக்கிறது.
 
தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் தற்போது வரை அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. எனவே. தமிழக அரசு உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி அருகே திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என காவல்துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். எம்எல்ஏ அய்யப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்த சம்பவம் சுங்கச்சாவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com