மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும்.
மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Published on
Updated on
2 min read


ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.

பொதுவாக, அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வுசெய்வது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களின் வழக்கம். அரசு அலுவலகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளால் பயன்பெறக்கூடிய மக்களைத் தேடிச் சென்றால், எந்த அளவு பணிகள் நிறைவேறியிருக்கின்றன என்பதைக் காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டிவிடும் என்பதால் மக்கள் வசிக்கும் பணிக்கு அதிக அளவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்து நமக்கு வழங்கப்படவில்லை. கடுமையான உழைப்பின் விளைவு இது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையிலே ஆட்சியின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களாக வெளிப்பட்டு வருகிறது. 

ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன்.

திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன். திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதன் சமூகநீதிக் கொள்கையையும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர்களன்றோ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்! 

கழக அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். பணிகள் காத்திருந்தன. வா..வா.. என என்னை அழைப்பது போலவே தோன்றியது.

உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான - நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு முதலீட்டாளர் மாநாட்டிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, முழுமை பெற்ற தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வைத்து, வேலைவாய்ப்புகளை அளிப்பது என்கிற அளவில், முதலீட்டாளர்களுக்கான தொழில் கட்டமைப்புகளை உருவாக்கித் தரும் நண்பனாக மக்கள் நலன் காக்கும் நமது அரசு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை.

நாமக்கல் மாநாட்டில் நான் சொன்னதுபோல, ‘தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’ என்பதற்கேற்ப - கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com