418 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவட்டாறில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசன் செய்தனர். 
கோயில் விமான கலசத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை
கோயில் விமான கலசத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை
Published on
Updated on
2 min read



நாகர்கோவில்: 418 ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசன் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான ஆதிகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அடியார்க்கெல்லாம் அருள்பாலிக்கும் ஆதிகேசவ சுவாமி வீற்றிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 76 ஆவது திவ்ய தேசம் ஆகும்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், வ.விஜய்வசந்த் எம்.பி.,

திருவட்டாறு தலம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திரேதாயுகத்தில் தோன்றியது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் தோன்றுவதற்கு முன்பே  இக்கோயில் தோன்றியது என்பதால் இது ஆதி ஆனந்தம் என்று அழைக்கப்படுகிறது. தென்னாட்டின் வைகுண்டம்  எனப் போற்றப்படும் இக்கோயிலில் பெருமாள் அனந்த சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418  ஆண்டுகளுக்கு பிறகு இன்று புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கின. 8 ஆவது நாளான புதன்கிழமை (ஜூலை 6) அதிகாலை 3.30 மணிக்கு ஹோம பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து திருவனந்தபுரம் கலா பீடம் முரளியின் பஞ்சவாத்தியமும் , டி.எஸ்.எம். உமாசங்கர், சிதம்பரம் எஸ்.முத்துராமன், கடகத்தூர் கே.ஆர்.முத்துகுமாரசுவாமி ஆகியோரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

காலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை ஜீவ கலச அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்று, மூலவர் விமானத்துக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் விமானத்துக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், வ.விஜய்வசந்த் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர்கள் ந.தளவாய்சுந்தரம்(கன்னியாகுமரி) , எம்.ஆர்.காந்தி( நாகர்கோவில்)  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருவட்டாறுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com