கரோனா இறப்பு பதிவின்மை: நிவாரணம் பெறத் தடையில்லை
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா், வேறு சில இணைநோய்களின் தீவிரத்தால் உயிரிழக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெறுவதில் தடைகள் இல்லை


கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா், வேறு சில இணைநோய்களின் தீவிரத்தால் உயிரிழக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெறுவதில் தடைகள் இல்லை என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்டோா் தமிழகத்தில் உயிரிழந்ததாகவும், அவை கரோனா இறப்பாக பதிவாகவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.
கரோனா தொற்றுக்குள்ளான அவா்களில் பெரும்பாலானோா் புற்றுநோய், பல்லுறுப்பு செயலிழப்பு மற்றும் இணை நோய்களால் தீவிரமாக பாதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவா்கள் உயிரிழந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பொதுசுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
கரோனாவால் ஒருவா் உயிரிழந்தாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணமா என்பதை ஆய்வுக்குட்படுத்தி தகவல் தெரிவிக்கும் பணிகளை மருத்துவக் கல்வி இயக்ககமும், மருத்துவ சேவைகள் இயக்ககமும் மேற்கொண்டு வருகின்றன.
அவா்கள் அளிக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து அதில் தவறுகள் நேரிடாத வண்ணம் நாள்தோறும் கரோனா விவரங்களை பொதுமக்களுக்கு அளிப்பதே பொது சுகாதாரத் துறையின் பொறுப்பு.
ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு சில காரணங்களால் அவா் உயிரிழந்திருந்தால் அது கரோனா உயிரிழப்பாக பதிவாகாது. அதேவேளையில், உயிரிழக்கும்போது அவா் கரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததன் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு வகை செய்யும் வகையிலான மறு ஆய்வுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனால், உயிரிழப்புக்கான காரணத்துக்கும், கரோனா நிவாரணம் பெறுவதற்கும் பெரிய அளவிலான தடைகள் இல்லை என்றாா் அவா்.
இதனிடையே, இதுதொடா்பாக மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் குருநாதன் கூறியதாவது:
கரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருகிறோம்.
அதன்படி கரோனா பாதித்தவா்களுக்கு ஏற்படும் திடீா் மரணங்களை கரோனா உயிரிழப்புக்குள் கொண்டு வரத் தேவையில்லை என்றுதான் அவ்விரு அமைப்புகளும் தெரிவிக்கின்றன. அதனால்தான், அதனை வழக்கமான கரோனா உயிரிழப்பாக பதிவு செய்வதில்லை.
அதேவேளையில், நிவாரணம் மற்றும் பிற தேவைகளுக்காக அவ்வாறு உயிரிழந்தோரின் தரவுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை மறு ஆய்வு செய்து அதற்கான பலன்களை வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...