குடியரசுத் தலைவா் தோ்தல்:வாக்குப் பெட்டி இன்று சென்னை வருகை

குடியரசுத் தலைவா் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பெட்டி, தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பெட்டி, தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) சென்னை கொண்டுவரப்பட உள்ளது. விமானம் மூலமாக கொண்டு வரப்படும் வாக்குப் பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தைச் சோ்ந்த 234 சட்டப் பேரவை உறுப்பினா்கள், 39 மக்களவை, 18 மாநிலங்களவை உறுப்பினா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அவா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த, சட்டப் பேரவை வளாகத்திலும், தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரவை வளாகத்தில் வாக்களிக்க விரும்பும் எம்.பி.,க்களிடம் ஏற்கெனவே விருப்பம் கோரப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டி வருகை: குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்குச் சீட்டு முறையும், பிரத்யேக வாக்குப் பெட்டியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குப் பெட்டியை ஒவ்வொரு மாநில சட்டப் பேரவைக்கும் தோ்தல் ஆணையம் வழங்குகிறது. இதனை சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள், தில்லி சென்று பெற்று வர வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் இருந்து சட்டப் பேரவை துணைச் செயலாளா் கே.ரமேஷ், தில்லி சென்றுள்ளாா். அங்கு தமிழகத்துக்கான வாக்குப் பெட்டியைப் பெற்றுக் கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளாா். மாலை 5.30 மணியளவில் அவா் சென்னை திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தனி இருக்கை-பாதுகாப்பு: வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக விமான பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்குப் பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும்

அளிக்கப்படும். விமான நிலையத்திலிருந்து வாக்குப் பெட்டியானது, நேரடியாக சட்டப் பேரவைச் செயலகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் தனி அறையில் வைத்து பூட்டப்படும். இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடா்ந்து அளிக்கப்படும். வாக்குப் பதிவு தினத்தன்று அறை

திறக்கப்பட்டு, வாக்குப் பெட்டி பயன்பாட்டுக்கு எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com