திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
குபேர பெருமானின் குமாரர்கள் மணிக்ரீவன், நளகூபன் ஆனி மாதப் பெளர்ணமியன்று இறைவன் - இறைவியை வழிபட்டு, பொன் வில்வ சாரத்தின் மகிமையை உணர்ந்தது இத்திருக்கோயிலில் தான். மேலும் குபேர பெருமானும் இக்கோயில் இறைவனை வழிபட்டுள்ளார்.
பணம், நகைகள் மீதான தோஷங்களை நீக்கி, செல்வ வளத்தை பெருக்கும் பரிகாரத்தலமான இக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி நாளான புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையும் படிக்க | முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தில்லி பயணம்: மோடியுடன் சந்திப்பு
இதையொட்டி, அருள்மிகு சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், குபேரப் பெருமானின் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பிறகு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன.
இந்த பெளர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் என்.சியாமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.