
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் 2 சமையல் எரிவாயு உருளை வைத்திருந்தால் அவர்களுக்கு அரசின் முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்படும் என்ற அரசின் உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அளவில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஏராளமான முதியோருக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை வங்கிக் கணக்கின் மூலம் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 சமையல் எரிவாயு உருளை வைத்துள்ளவர்கள், அரசுப் பணியில் உள்ளவர்கள், ரூ. 1 லட்சத்துக்கு மேல் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள், சர்க்கரை மற்றும் "என்' குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2 சமையல் எரிவாயு உருளையால் சிக்கல்: 2 சமையல் எரிவாயு வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் முதியோர் கலக்கமடைந்துள்ளனர். பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் 2 சமையல் எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு சமையல் எரிவாயு உருளை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்குவதால், 2 உருளைகள் வைத்திருப்பவர்கள், ஓர் உருளையைத் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், சமையல் எரிவாயு உருளையின் வைப்புத்தொகை ரூ. 450-இல் இருந்து தற்போது ரூ. 2500 வரை உயர்ந்துள்ளது. முதியவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த எரிவாயு உருளையைப் பெற ரூ. 450 மட்டுமே கட்டியுள்ளனர்.
தற்போது அந்த எரிவாயு உருளைகளைத் திரும்ப ஒப்படைப்பவர்களுக்கு ரூ. 450 மட்டுமே வழங்கப்படுகிறது. மீண்டும் கூடுதல் எரிவாயு உருளையைப் பெற வைப்புத் தொகையாக ரூ. 2,500 கட்டினால் மட்டுமே அது கிடைக்கும். எனவே, முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு ஒரு சமையல் எரிவாயு உருளை என்ற அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே தவணையில் 2 எரிவாயு உருளை பெற்றவர்களுக்கும் சிக்கல்
ஒரே வைப்புத்தொகையின் மூலம் 2 சமையல் எரிவாயு உருளை பெற்றவர்கள், ஓர் உருளையை மட்டும் திரும்ப ஒப்படைக்க முடியாது. 2 உருளைகளையும் திரும்ப ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு ரூ. 900 வழங்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் ஒரு சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கு ரூ.2,500 வைப்புத்தொகை கட்டினால் மட்டுமே வழங்கப்படும். இதன்மூலம் முதியோர் கூடுதல் தொகை செலுத்தி எரிவாயு உருளை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.