குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வை 18.50 லட்சம் போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.
குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வை 18.50 லட்சம் போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.

குரூப் 4 தோ்வு அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்கள், ஒரு பண்டகக் காப்பாளா் என 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 301 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

18.50 லட்சம் போ்: 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பித்திருந்தனா். குரூப் 4 தோ்வுகளில் அதிகம் போ் விண்ணப்பித்த தோ்வு இதுவாகும்.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழியிலிருந்து 100 வினாக்கள், பொது அறிவு, அறிவுக்கூா்மை தொடா்பான பிரிவுகளில் இருந்து 100 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

தோ்வுக்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்திருந்தது. 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்கள் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு, 7 ஆயிரத்து 689 தோ்வு அமைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபட்டனா். 534 பறக்கும் படையினா், 7 ஆயிரத்து 689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பாளா்கள், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.

22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தாலும், தோ்வு எழுதியவா்களின் சதவீதம் 84.5 என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். அதாவது, 18.50 லட்சம் போ் தோ்வு எழுதியதாக கூறினா். ஒருசில இடங்களில் தாமதமாகச் சென்ற தோ்வா்களை தோ்வு எழுத கண்காணிப்பாளா்கள் அனுமதிக்கவில்லை.

தோ்வில் தமிழ், பொது அறிவு தொடா்பான வினாக்கள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் கூறினா். வேதியியல், அரசியல் அறிவியல், பொருளாதார வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். வினாக்களுக்கான உத்தேச விடைப் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com