1920-இல் பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டம்: தமிழக அரசின் உத்தரவில் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது.

இது தொடா்பான தமிழக அரசின் உத்தரவு: ஏழை, எளிய சமூகக் குழந்தைகளின் காலடிகள் கல்விச் சாலையை எட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பள்ளியில் உணவளிக்கும் திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது, அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம். மன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. 1920 செப்.16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. பின்னா், சேத்துப்பட்டு, மீா்சாகிப்பேட்டை பகுதிகளில் இயங்கிய மேலும் நான்கு பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக, ஐந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது 811-லிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே 1,671 ஆக உயா்ந்தது.

1957-இல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வா் காமராஜா் தொடக்கி வைத்தாா். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.18 என்ற அளவில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை 1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடக்கப்பட்டது. சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. பின்னா் வாரத்துக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டது. சட்டப் பேரவையில் 1998-ஜூலை 23-இல் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்பின், 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தைத் தொடா்ந்து, காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com