என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
Published on
Updated on
2 min read

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத் துறை நிறுவனங்களைவிட சிறப்பாக செயல்பட்டு ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை என்.எல்.சி. நிறுவனம்தான் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. என்.எல்.சி. நிறுவனத்தை உருவாக்கிட பெருந்தலைவர் காமராசர், இப்பகுதி மக்களிடம் நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலங்களை வழங்குமாறு கேட்டபோது, முப்பதுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும், நிலங்களையும் அளித்தனர்.

பண்டித ஜவகர்லால் நேரு, பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் கோயில்கள் என்று வர்ணித்தார். அவரால் தொடங்கி வைக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனத்தில் தங்கள் நிலத்தையும், குடியிருந்த வீடுகளையும் தாரை வார்த்து தந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் முழுமையாக இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே பணி வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அளித்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் ஒப்பீட்டு அளவில் மிக குறைவானதுதான். இந்நாட்டுக்கு ஒளி வழங்கும் மின்சார உற்பத்திக்காக நெய்வேலி சுற்று வட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துகளை அளித்தனர்.

என்.எல்.சி. பொதுத் துறையாக நீடிக்க வேண்டும் என்று நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இந்நிறுவனத்தில் தமிழர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும். குறிப்பாக வீடு, நிலம் தந்தவர்கள், கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால், இன்று என்.எல்.சி. நிறுவனம், வேலை வாய்ப்புகளில் நேரடியாக வட இந்தியர்களைப் புகுத்தும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர பணி இடங்களில் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்நிலையில்தான் தற்போது நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்.எல்.சி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக் கூட தகுதி இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? வட மாநில இளைஞர்களை கொண்டு வந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பது நல்லது அல்ல. என்.எல்.சி. நிறுவனம் போன்ற ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com