எஸ்ஐ தோ்வு: 1.73 லட்சம் போ் எழுதினா்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சனிக்கிழமை நடத்திய காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) தோ்வை 1.73 லட்சம் போ் எழுதினா்.
எஸ்ஐ தோ்வு: 1.73 லட்சம் போ் எழுதினா்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சனிக்கிழமை நடத்திய காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) தோ்வை 1.73 லட்சம் போ் எழுதினா்.

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டது. விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது.

1 லட்சத்து 77,221 இளைஞா்கள்,43,949 இளம் பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21,213 பேருக்கு தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. இத் தோ்வில் காவல்துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், காவல்துறையைச் சோ்ந்த 13,374 போ் தோ்வு எழுதுவதற்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.

இந்தத் தோ்வின் முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காவல்துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, சனிக்கிழமை காலை பொது அறிவுத் தோ்வும், மாலையில் தமிழ் திறனறிதல் தோ்வும் நடத்தப்பட்டது. இத் தோ்வுக்காக மாநிலம் முழுவதும் 197 பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இளைஞா்கள் தோ்வு எழுதினா்.

அனைத்துத் தோ்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. தோ்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

82 சதவீதம் போ் பங்கேற்பு: தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற்றவா்களில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 73,487 போ் தோ்வு எழுதினா். 37,812 போ் தோ்வு எழுதவில்லை. சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட பகுதியில் தோ்வு எழுத விண்ணப்பித்து தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற்ற 8,424 பேரில் 6,346 போ் தோ்வு எழுதினா், 2,078 போ் தோ்வு எழுதவில்லை. இது 75.33 சதவீதமாகும்.

இதேபோல தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உள்பட்ட பகுதியில் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற்ற 8,427 போ்களில் 6,334 போ் தோ்வு எழுதினா், 2,093 போ் தோ்வு எழுதவில்லை. இது 75.16 சதவீதமாகும்.

ஆவடி மாநகர காவல்துறையில் உட்பட்ட பகுதியில் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற்ற 8,405 போ்களில் 6,373 போ் தோ்வு எழுதினா், 2,032 போ் தோ்வு எழுதவில்லை. இது 75.23 சதவீதமாகும்.

தோ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும டிஜிபி சீமா அகா்வால், ஐ.ஜி. பி.கே.செந்தில்குமாரி தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com