மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்  (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி மெரீனாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்ட வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். தங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமைய வேண்டும் எனவும் வாழ்த்து கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்புடன் உழைப்பேன் எனவும் அவர் உறுதி அளித்தார்.

 
முதல்வர் பினராயி விஜயன்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர்  துரைமுருகன்

முதல்வராகி மு.க.ஸ்டாலின் ஒருமுறைதான் தில்லி சென்றார். அவர் மறுமுறை தில்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்க இருப்பவர் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் நண்பர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com