மாா்ச் 18-இல் தமிழக நிதிநிலை அறிக்கை பேரவைத் தலைவா் மு. அப்பாவு

தமிழக சட்டப் பேரவை வரும் 18-ஆம் தேதி கூடவுள்ளது என்றும் அன்றைய தினம் வரும் நிதியாண்டுக்கான (2022-2023) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவையில் தாக்கல் செய்யப்படும்
மாா்ச் 18-இல் தமிழக நிதிநிலை அறிக்கை பேரவைத் தலைவா் மு. அப்பாவு

தமிழக சட்டப் பேரவை வரும் 18-ஆம் தேதி கூடவுள்ளது என்றும் அன்றைய தினம் வரும் நிதியாண்டுக்கான (2022-2023) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கூறினாா்.

மேலும், வரும் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது.

சட்டப் பேரவை கூட்டத் தொடா் தொடங்குவதற்கான தேதிகள் குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:-

தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வரும் 18-ஆம் தேதியன்று கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான மாநிலத்தின் வரவு, செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளாா். கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடுதிரை உதவியுடன் கணினி முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகும்.

திமுக ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை வரும் 18-ஆம் தேதி தாக்கல் செய்கிறாா்.

எத்தனை நாள்கள் கூட்டம்?: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழு கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வரவு ,செலவு திட்ட அறிக்கையை பேரவையில் நிறைவேற்றுவதற்காக கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என்பதற்கான தேதிகள் முடிவு செய்யப்படும்.

மேலும், 2022-2023-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை, 2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கைகள் ஆகியன நிதியமைச்சரால் வரும் 24-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பேரவை கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கேள்வி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும். படிப்படியாக பேரவையின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப ரீதியிலான அம்சங்களை ஆராய்ந்து முழு நேரலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

வேளாண் நிதிநிலை: நிதிநிலை அறிக்கை வரும் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வேளாண்மை நிதிநிலை அறிக்கை வரும் 19-ஆம் தேதி தாக்கலாகிறது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா். வேளாண் நிதிநிலை அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக பொது மக்கள், விவசாயிகள், வேளாண் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.

மாா்ச் 24 வரை கூட்டம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரை மாா்ச் 24-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிதிநிலை, வேளாண் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவை பேரவையில் நிறைவேற்றப்படும். இதன்பிறகு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான பொது விவாதம் வேறொரு தேதியில் தொடங்கி நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com