சமயபுரம் பூச்சொரிதல் விழா கோலாகலமாக தொடங்கியது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
சமயபுரம் பூச்சொரிதல் விழா கோலாகலமாக தொடங்கியது


திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குவது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு கோயில் கொடிமரம் அருகே விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பூத்தட்டை யானை மீது வைத்தும், கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளைச் சுமந்தும் தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த விழாவையொட்டி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் எளிதாக அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துள்ளனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்துவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல செளபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரையில் 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். 

இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் ஆகியவை மட்டுமே நைவேத்தியமாகப் படையல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் சி. கல்யாணி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com