ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு 20,000 கோடி இழப்பு ஏற்படும்: நிதியமைச்சர்

ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையில் தமிழகத்துக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். 
ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு 20,000 கோடி இழப்பு ஏற்படும்: நிதியமைச்சர்
Published on
Updated on
2 min read

ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையில் தமிழகத்துக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். 

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது பேசிய அவர், 

'2014 ஆம் ஆண்டு முதல், வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின்  வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும்  இந்த சவாலான ஆண்டிலும் நிதிப் பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது. 

மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்த போது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கரோனா பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது.

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிற்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.

நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும். இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.

15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) மத்திய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பெருந்தொற்றின் காரணமாக, ஆறாவது மாநில நிதிக் குழுவின் காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை (Action Taken Report) விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்' என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com