மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: அப்பாவு திறந்து வைத்தார்

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்குள்பட்ட விவசாய நிலங்களுக்கு கார் சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.
மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாயில் தண்ணீரை திறந்து திறந்து வைத்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு
மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாயில் தண்ணீரை திறந்து திறந்து வைத்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு


அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்குள்பட்ட விவசாய நிலங்களுக்கு கார் சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடித் தொடங்குவதற்கு வசதியாக தண்ணீர் மே 1 -இல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து 40 அடி மதகு மூலம் பெருங்கால் பாசனத்திற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

தண்ணீரை திறந்து வைத்த பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனப்பகுதிகளுக்கு கார் சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குக் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் உள்ள 2,756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பயன்பெறும். 

மே 1 முதல் ஆகஸ்ட் 28 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விவசாயிகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு  கேட்டுக்கொண்டார். 

தமிழக முதல்வர் விவசாயிகளுக்காக விவசாயக் கடன், நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். விளைந்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் நேரடியாக மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து விற்பனை செய்யும் வசதியும் உள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, பச்சையாறு, ஆலந்துறையாறு, பொய்கையாறு அணைகளை மலையில் சுரங்கம் மூலம் இணைப்பதன் மூலம் வறண்ட நிலங்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என்று கூறியதையடுத்து அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

உர விலையை கட்டுப்படுத்துவது மத்திய அரசு. மானியங்கள் குறைக்கப்பட்டதால் விலை உயர்ந்திருக்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வந்தால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்பாண்டத் தொழிலாளர்கள் மண்பாண்டத் தொழிலுக்காக 2011ஆம் ஆண்டுக்கு முன் இருந்த விதிமுறைகளின் படி மீண்டும் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மணீமுத்தாறு அருவிக்கு செல்ல விதிக்கப்படும் கட்டணம் எந்த அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து விசாரணை செய்வதோடு பயணிகள் இலவசமாக குளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணிமுத்தாறு அணையில் உள்ள பூங்காவை சீரமைக்க திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டவுடன் பூங்கா சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் திறக்கப்படும் என்றார்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு, திருநெல்வேலி நாடாளூமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கிசுப்பையா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவிப் பொறியாளர்கள் முருகன், மகேஸ்வரன், வினோத்குமார், சிவகணேஷ்குமார், சுஷ்மி பென்சியா, வேளாண் துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி துணைத் தலைவர் இசக்கிப்பாண்டியன் மற்றும் திமுக, அதிமுக நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com