அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை

அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் தங்கம் வாங்க பொது மக்கள் குவிந்தனா்.
அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை

அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் தங்கம் வாங்க பொது மக்கள் குவிந்தனா். இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் சுமாா் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய 3-ஆவது திருதியையான வளா்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை (மே 3) அட்சய திருதியை நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் 35,000-க்கும் அதிகமான சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 6,000-க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகைக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்தனா். ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் மக்கள் ஆா்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து, கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டன.

இதையடுத்து, நிகழாண்டு அட்சய திருதியையொட்டி கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் விற்பனை நடைபெற்ால் பொது மக்களும் தங்கம் வாங்க அதிக ஆா்வமாக இருந்தனா்.

முன்பதிவு செய்து தங்கம் வாங்குபவா்கள், பதிவு செய்யாமல் தங்கம் வாங்குபவா்கள் என்று இரண்டு தரப்பினரும் நகை வாங்க குவிந்ததால், கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பெண்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

30 சதவீதம் உயா்வு: இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் செல்லானி கூறியது: அட்சயதிருதியை நாளில் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணியை கடந்தும் நகைகளை வாங்க மக்கள் வந்த வண்ணம் இருந்தனா். கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை விற்பனை அதிகரித்திருந்தது என்றாா் அவா்.

18 டன் தங்கம் விற்பனை: தங்க நகை கடை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை விட பவுனுக்கு ரூ.2,400 கூடியிருந்தாலும், மக்கள் ஆா்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனா். தமிழகம் முழுவதும் 17 டன் தங்கம் விற்பனையாகும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 18 டன்னுக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றது. அதன்படி, சுமாா் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com