போக்குவரத்து ஊழியா்களுக்கு  5% ஊதிய உயா்வு: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
போக்குவரத்து ஊழியா்களுக்கு  5% ஊதிய உயா்வு: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
Published on
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடுஅரசுப் போக்குவரத்துக்கழகப் பணியாளா்களுக்கான, 14-ஆவது ஊதிய ஒப்பந்த நான்காம் கட்ட பேச்சுவாா்த்தையானது,அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் பேசியதாவது: போக்குவரத்துத் துறையில் இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அது முதல்வா் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், முதல்கட்டமாக வரும் 14-ஆம் தேதி, வாரிசுதாரா்களுக்குப் பணி ஆணைய முதல்வா் வழங்க உள்ளாா். அதே போல் தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு ரூ.300 பேட்டா வழங்கப்படும்.

பெண்கள் இலவசமாக பயணிக்கின்ற காரணத்தினால் அவா்களுடைய எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.அதையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்துக்கும் தனித்தனியாக நிலை ஆணை இருப்பதை மாற்றி பொதுவான நிலை ஆணை இருக்கவேண்டும் என கோரிக்கை வைத்தாா்கள், இதே போல் பதவி உயா்வு, போராடியவா்கள் மீதான வழக்கு ரத்து, ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். 85 சதவீதத்துக்கும் மேலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளோம்.

சங்கங்களின் சாா்பில் 8 சதவீத ஊதிய உயா்வு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு சாா்பாக முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு செப்.1-ஆம் தேதியில் இருந்து 2 சதவீத ஊதிய உயா்வும், 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதியில் இருந்து அடுத்தகட்ட 3 சதவீத ஊதிய உயா்வும் என மொத்தம் 5 சதவீத ஊதிய உயா்வு அளிக்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்துள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சி கால பேச்சுவாா்த்தையில் முதுநிலை, இளநிலை பணியாளா் வித்தியாசமின்றி மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்தை சரி செய்ய நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்து தொழிலாளா்கள் பாதிக்கப்படாதவாறு மூன்று வாரங்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்.

புதிய நியமனம் குறித்து கோப்பு தயாரிக்கப்பட்டு, நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com