அன்னைத் தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை: அமைச்சர் சேகர்பாபு

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு


சென்னை: அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை,  விரும்புவோர் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம் என இந்து சமயம்  மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: 

திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும்போது வெய்யிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நீர்த் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கபாலீசுவரர் கோயிலில் இரண்டு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை பழ ரசம் வழங்க அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும், அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தைச் செயல்படுத்துவது கடினமான காரியம் என்ற அவர், தொடர்ந்து அதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோர் தரிசனம் செய்யலாம் என கூறினார். 

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com