சென்னை பாஜக பிரமுகர் கொலை: எடப்பாடி அருகே குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

சென்னை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரை எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் குஞ்சாம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த வீடு.
எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் குஞ்சாம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த வீடு.
Published on
Updated on
2 min read


எடப்பாடி: சென்னை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரை எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்தவா் பாலச்சந்தா் (30). மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்த பாலச்சந்தருக்கு, அச்சுறுத்தல் இருந்ததால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பாலச்சந்தா், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கா் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருக்கும்போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் பாலகிருஷ்ணன் டீ குடிக்க சென்றிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்தது. கொலை செய்துவிட்டு, அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு துப்பு துலக்கி வந்த போலீஸார் தப்பி ஓடிய குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலா் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த ரெளடி தா்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் கூட்டாளி கலைவாணனுடன் சோ்ந்து முன் விரோதம் காரணமாக பாலசந்தரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து கொலையாளிகளின் கைபேசி எண்ணை ஆய்வு செய்து அதனை பின்தொடர்ந்த போலீசார், அவர்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்று, இறுதியில் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், குற்றவாளிகளை பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீஸார் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் குஞ்சாம்பாளையம் பகுதியிலிருந்து கொலைக் குற்றவாளிகளான நால்வரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். 

இதனையடுத்து குற்றவாளிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான குட்டி(எ)பழனிசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

போலீஸார் விசாரணையில் குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குட்டி (எ)பழனிசாமி, ஜேசிபி இயந்திரம் வைத்து பணி செய்து வந்ததாகவும், இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பணி செய்ததில் பலரது அறிமுகம் கிடைத்துள்ள நிலையில், நேற்று மாலை குட்டியை புதன் அன்று இரவு செல்போனில் தொடர்பு கொண்ட வழக்குரைஞர் ஒருவர் தனக்கு அறிமுகமான நபர்கள் நால்வர் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் அவர்களுக்கு இரவு மட்டும் தங்க இடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், வழக்குரைஞர் தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே நான்கு இளைஞர்கள் குட்டி இருந்த வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் குட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சென்னையிலிருந்து அவர்களைப் பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்துச் சென்று விட்டதாகவும்,  சென்னையிலிருந்து வந்த நான்கு நபர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பாஜக பிரமுகர் கொலையில் தொடர்புடைய 4 குற்றவாளிகளில் எடப்பாடி அருகே கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com