ஆசிய பளுதூக்கும் போட்டியில் 75 வயது முதியவர்: அரசு நிதியுதவி செய்ய கோரிக்கை

ஆசிய பளுதூக்கும் போட்டிக்குத் தேர்வாகியும் வறுமை காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அரசு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் 75 வயது முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பதக்கம் மற்றும் சான்றிதழுடன் பளுதூக்கும் வீரர் வீரையன்.
பதக்கம் மற்றும் சான்றிதழுடன் பளுதூக்கும் வீரர் வீரையன்.
Published on
Updated on
1 min read

ஆசிய பளுதூக்கும் போட்டிக்குத் தேர்வாகியும் வறுமை காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அரசு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் 75 வயது முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் புட்டுத்தோப்பு செக்கடி தெருவில் வசித்து வரும் 75 வயது முதியவரான வீரையன், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற்று வருகிறார். 

முதியவரான வீரையன் பணியின்போதும் சரி, தற்போது ஓய்வுபெற்ற நிலையிலும் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தற்போதும் பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இந்த போட்டியானது வரும் ஜூன் மாதம்  17 முதல் 21 ஆம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள 70 ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் தற்போது 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையை பளுதூக்கும் சங்கங்களாலும், தன்னாலும் செலுத்த முடியாத இந்த நிலையில் தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ,  தனியார் தொண்டுநிறுவனங்களோ உதவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். தனது பதக்கங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனுவும் அளித்துள்ளார். 

தனது வாழ்நாள் ஆசை நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தோடு 75 வயதிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் வீரையன். 

தற்போதைய காலகட்டத்தில் 60 வயதில் எல்லாம் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தனது 75 வயதில் நாட்டின் பெருமைக்காக ஆசிய பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என தனது ஆசை நிறைவேற்றப்படுமா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார் வீரையன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com