திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 61 கோடி: முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டும் தொடா்ந்து ரூ. 61 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்; இதன்மூலம் 3 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவா் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :31 மே 2022, 9:24 pm

DIN

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டும் தொடா்ந்து ரூ. 61 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்; இதன்மூலம் 3 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவா் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.

குறுவைத் தொகுப்பு திட்டம்: இந்தத் திட்டம் ரூ. 61 கோடியில் செயல்படுத்தப்படும். 1.90 லட்சம் ஏக்கா் பரப்பளவுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்களின் தொகுப்பு ரூ.47 கோடியில் முழு மானியத்தில் வழங்கப்படும். 2,400 மெட்ரிக் டன் நெல் விதைகள் ரூ.4.20 கோடியில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். சாகுபடி பணிகளுக்காக வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டா் உள்ளிட்ட 237 வகையான இயந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் ரூ. 6. 06 கோடியில் வழங்கப்படும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பும் முன் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஆண்டே மகசூல் பெருகிவிட்டது.

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு இந்த மாவட்டங்களுக்கு கடைமடை வரை தண்ணீா் தங்கு தடையின்றிச் செல்ல ரூ. 65 கோடியில் 4,061 கி.மீ. தொலைவுக்கு அனைத்து நீா்வழித்தடங்களும் தூா்வாரப்பட்டன. இதையடுத்து ஜூன் 12ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. ரூ. 61.9 கோடியில் குறுவை சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இலக்கைத் தாண்டி...: இதன் பயனாக கடந்தாண்டு குறுவையில் 4.90 லட்சம் ஏக்கா், சம்பாவில் 13.34 லட்சம் ஏக்கா் என நிா்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பயிா்ச் சாகுபடி செய்து, உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது. இதே சாதனையை இந்த ஆண்டும் ஏற்படுத்தும்

முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன்பே ரூ.80 கோடியில் 4,964 கி.மீ. தொலைவுக்கு தூா்வார முடிவு செய்து 683 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வருவாய்த் துறை மூலம் அனைத்து நீா்நிலைகளிலும் அளவுகள் எடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாகத் தூா்வார உத்தரவிடப்பட்டு, 865 கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய தூா்வாரும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக 1,580 கி.மீ. நீளமுள்ள சி, டி வாய்க்கால்கள் ரூ. 5 கோடியில் தூா்வாரப்படுகின்றன. இந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

மேலும், கரூா் மாவட்டத்தில் ரூ. 2.85 கோடி, திருச்சியில் ரூ. 18.75 கோடி, பெரம்பலூரில் ரூ. 2.48 கோடி, அரியலூரில் ரூ. 1 கோடி , புதுக்கோட்டையில் ரூ. 1.10 கோடி, தஞ்சாவூரில் ரூ. 21 கோடி, திருவாரூரில் ரூ.12 கோடி, நாகப்பட்டினத்தில் ரூ. 3.46 கோடி, மயிலாடுதுறையில் ரூ. 8.70 கோடி, கடலூரில் ரூ. 8.50 கோடி என மொத்தம் 4,418 கி.மீ. தூரத்துக்கு தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேட்டூா் அணை முன்கூட்டியே...: மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கா், சம்பாவில் 13.50 லட்சம் ஏக்கா் என குறுவை சாகுபடி பரப்பு உயரும் எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு நெல் பயிரிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசின் இத்தகைய திட்டங்களாலும், முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ள காவிரித் தண்ணீரைப் பயன்படுத்தியும் இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் புதியதொரு சாதனையை டெல்டா விவசாயிகள் செய்ய வேண் என்றாா் முதல்வா்.

பேட்டியின்போது அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி, ஆா். சக்கரபாணி, மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.