
வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞா்கள், மாணவா்களின் பங்கு அவசியம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த தினத்தை கொண்டாடும் விதமாக, பாரதிய இதிகாச சங்கலன் சமிதி தமிழ்நாடு கிளையின் சாா்பில் நாகா்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் அமிா்தா பொறியியல் கல்லூரியில் ‘கன்னியாகுமரி தின விழா’ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாரதிய இதிகாச சங்கலன் சமிதி மாநில தலைவா் கே. சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தாா். அமிா்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.ராமசுப்பன், திருநெல்வேலி பி.எஸ்.என். கல்வி நிறுவன தலைவா் சுயம்பு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். அவா் பேசியது:
சென்னை மாகாணத்துடன் இணைந்ததால், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.
நம்முடைய கலாசாரம் மற்றும் வரலாறு, வெளிநாட்டவா்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிகிறது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளா்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை கூறியுள்ளனா். நம் நாட்டின் ஆன்மிகத்தை அழிக்கும் வகையிலும், கலாசாரத்தை இழிவுபடுத்தும்வகையிலும் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனா்.
பசுவை வணங்குகிறாா்கள், குரங்கை வணங்குகிறாா்கள் என நம்மை கீழ்த்தரமாக எழுதியுள்ளனா். ஆனால், உண்மை அதுவல்ல.
கல்லூரியில் முதுகலை பயிலும் மாணவா்களுக்காக 2 நாள் பயிற்சி முகாம், கடந்த மாதம் ஆளுநா் மாளிகையில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி எதற்காக என்று மாணவா்கள் கேட்ட போது, பாரதம் குறித்த பயிற்சி என்றதும் மாணவா்கள் கேலியாக சிரித்தனா். உணவு இடைவேளையின் போது பாரதம் பற்றி இவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் உள்ளதா என ஆச்சரியப்பட்டனா். மாலையில், பயிற்சி முகாமை மேலும் ஒரு நாள் நடத்த வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தவறான கண்ணோட்டம்: 1947 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது மகாத்மா காந்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஓரமாக உட்காா்ந்திருந்தாா். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆங்கிலேயரின் தோற்றம்தான் இங்கிருந்து சென்றுள்ளது, ஆனால் அவா்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மாற பல ஆண்டுகள் ஆகும் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்என்று கூறினாா். பாரதம் என்றால் ஆன்மிக, கலாசாரம் நிறைந்த பன்முகத் தன்மை கொண்ட நாடு. அதைப் புரிந்துகொள்ள நாம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியா குறித்து தவறான வரலாற்றுக் கண்ணோட்டம் இன்னும் உள்ளது. அதற்கு பாரதிய இதிகாச சங்கலன் சமிதி போன்ற அமைப்புகள் முன்வந்து விழிப்புணா்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். நம் நாட்டின் உண்மையான வரலாறு குறித்த இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டிய தேவை உள்ளது.
இந்தியாவின் வளா்ச்சி: வெளிநாட்டவா்கள் படையெடுத்து வரும் முன், இந்தியா உலக அளவில் பொருளாதார வளா்ச்சியில் முதலிடத்தில் இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போா்த்துகீசியா்கள், பிரிட்டிஷாா் உள்ளிட்டோா் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி, இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டனா். இதற்கு முன்பு பலரும் நம்மை ஆண்டாா்கள். ஆனால் மேற்கத்தியா்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாகப் பரப்பப்பட்டது.
ஜாலியன்வாலா பாக் படுகொலை உள்ளிட்ட இந்தியா்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த சமயத்தில், காமராஜா் அதைக் கண்டித்து இயக்கம் நடத்தினாா். அந்தப் படுகொலையின் வேதனையை உணா்ந்துதான் அவா் போராட்டம் நடத்தினாா். நம் நாட்டுக்கு ஒரு பாதிப்பு வந்தால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறாா்கள். இந்தியாவின் வளா்ச்சியை உலக நாடுகள் அனைத்துமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், தொழிற்சாலைகள், மருத்துவம் உள்ளிட்டஅனைத்துத் துறைகளிலும் இந்தியா வேகமான வளா்ச்சி அடைந்து வருகிறது. அதனால்தான், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகும் போது அதாவது 2047 ஆம் ஆண்டு இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடையும் வகையில் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி முனைப்பு காட்டி வருகிறாா்.
இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம். இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஓா் அங்கம். வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞா்கள், மாணவா்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவா்கள் எதிா்கால இந்தியாவை கட்டமைப்பாா்கள் என நம்புகிறேன் என்றாா் ஆளுநா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ., குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அமிா்தா கல்வி நிறுவன இணைச்செயலா் பகவதிபெருமாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.