உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: நளினி உள்பட 6 போ் இன்றே விடுதலை

ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அனைவரும் இன்றே சிறையில் இருந்து விடுதலையாகின்றனர்.
நளினி வேலூரில், காட்பாடி காவல்நிலையத்துக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
நளினி வேலூரில், காட்பாடி காவல்நிலையத்துக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அனைவரும் இன்றே சிறையிலிருந்து விடுதலையாகின்றனர்.

இலங்கை குடியுரிமை பெற்ற நால்வர் உள்பட ஆறு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நகல், சிறைத் துறைக்குக் கிடைக்கப்பெற்றதும், உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை சிறைத் துறை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

அந்த வகையில், பரோலில் இருந்த நளினி, வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்நிலையத்துக்கு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு, முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். 

முன்னதாக, இன்று பிற்பகலில் அவர் அடைக்கப்பட்டிருந்த வேலூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரை விடுதலை செய்வதற்கான சில முக்கிய நடைமுறைகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் இன்று மாலையே விடுதலை செய்யப்பட்டார்.

இது போலவே, மற்ற நால்வரும் அடைக்கப்பட்டிருக்கும் புழல் மற்றும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கும் உச்ச நீதிமன்றத்தின் விடுதலை செய்யும் உத்தரவு கிடைக்கப்பெற்றது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி பேசுகையில், நளினி இனி சுதந்திர பெண். அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என்று கூறினார். மேலும், அவர் சென்னையிலேயே இருப்பாரா அல்லது லண்டனில்  தனது மகளுடன் இருக்க விரும்புவாரா என்று கேட்டதற்கு, அது பற்றி அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

முருகனின் நிலை குறித்துக் கேட்டதற்கு, விடுதலையாகும் 4 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாந்தன், இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கான நடைமுறைகள் முடியும் வரை அவர் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படலாம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தன்
சாந்தன்

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய நளினி, ரவிச்சந்திரன் மட்டுமின்றி சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்போது, மனுதாரா்கள் 6 பேரின் சிறைவாசத்தின் போது அவா்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததையும், அவா்களின் கல்வித் தகுதி, உடல்நிலை, செயல்பாடுகளையும் உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, இந்த 6 பேரின் விவகாரத்திலும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆா். கவாய் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் தீா்மானம் அனைவருக்குமானதுதானே என கேட்டனா். அதற்கு

தமிழக அரசின் தரப்பின் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘தமிழக அரசின் பரிந்துரையானது பேரறிவாளன் உள்பட ஏழு பேருக்குமானதுதான்’ என்றாா். அப்போது, மனுதாரா்கள் தனிமைச் சிறையில் 30 வருடங்கள் இருந்தனரா என நீதிபதி அமா்வு கேட்டது. அதற்கு நளினி வழக்குரைஞா் ஆனந்த செல்வம், ‘இந்த வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடைபெற்ால், மனுதாரா்கள் அனைவரும் தனிமைச் சிறையில்தான் வைக்கப்பட்டிருந்தனா்’ என்றாா்.

30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து நிகழாண்டு மே 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு இந்த விவகாரத்திலும் பொருந்தும் என நீதிபதிகள்அமா்வு கூறியது.

6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும்

இது தொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘பிரிவு 302-இன் கீழ் தண்டனைபெற்ற மேல்முறையீட்டு மனுதாரரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநா், மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவா் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த வழக்கில் அனைத்து மனுதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை தீா்மானித்துள்ளது. ஆகவே, ஏ.ஜி. பேரறிவாளனை விடுதலை செய்த போது, இந்த நீதிமன்றத்தின் முக்கியமான காரணிகள் தற்போதைய மனுதாரா்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறோம். அனைத்து மேல்முறையீட்டு மனுதாரா்களும் குற்றம் தொடா்பான தங்களது தண்டனையை அனுபவித்திருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே, வேறு எந்த வழக்கில் தேவைப்படாவிட்டால் அவா்கள் (6 பேரும்) விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்’என்று தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com