ஆளுநா், முதல்வா் புகழஞ்சலி

மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

மிகச் சிறந்த கல்வியாளரும், தமிழறிஞரும் பத்ம விருது பெற்றவருமான அவ்வை நடராசனின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா அமைதியின் மடியில் இளைப்பாறட்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: சிறந்த தமிழறிஞா் அவ்வை நடராசன், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ் வளா்ச்சித் துறை செயலாளா், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் என பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவா் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழாா்வலா்கள் இருக்க முடியாது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி மீது, மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவா் அவ்வை நடராசன். தமிழ்ப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்தாா். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கா்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள அவ்வை நடராசனின் மறைவு தமிழ்த் துறையினருக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாா், தமிழறிஞா்கள், மாணவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கே.அண்ணாமலை (தமிழக பாஜக தலைவா்): மிகச் சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராசன் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். அவரது மறைவு, தமிழுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com