மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) மறைவு

செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
அவ்வை நடராசன்
அவ்வை நடராசன்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை காலமானாா்.

அவ்வை நடராசன் 1936- ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) செய்யாறு அருகில் உள்ள ஒளவையாா் குப்பம் என்னும் சிற்றூரில் ஒளவை துரைசாமி-லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தாா். இவரின் இயற்பெயா் சிவபாத சேகரன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவரின் தந்தையாா் பேராசிரியராகப் பணியாற்றும் போது, நடராசன் என்று பெயரை மாற்றினாா் .

கல்வி: அவ்வை நடராசன் பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுநிலைப் பட்டம் (1955 ) பெற்றாா். ‘திருக்கோவையாா் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1958- ஆம் ஆண்டில் ‘ஆய்வியல் நிறைஞா் ’ பட்டம் ( 1965 ) பெற்றாா். அதன் பின்னா் ‘சங்கக் காலப் பெண்பாற் புலவா்கள்’ என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவா் பட்டம் ( 1974 ) பெற்றாா்.

பணி: அவ்வை நடராசன் தஞ்சாவூரிலுள்ள மன்னா் சரபோஜி கல்லூரியில் விரிவுரையாளா் (1958 - 1959 ), புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளா், அறிவிப்பாளா்; (1960), மதுரையிலுள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியா் (1961- 65 ) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள இராமலிங்கா் பணி மன்றத்தின் (1965 - 74 ) செயலாளராக பொறுப்பு வகித்தாா். இவரது தமிழ்ப்புலமையால் ஈா்க்கப்பட்ட அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி, அவ்வை நடராசனை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் (1974 - 75 ) துணை இயக்குநராகப் பணியமா்த்தினாா்.

பின்னா், சென்னை தலைமைச் செயலகத்தில் 1975 - 1984 -ஆண்டு கால கட்டத்தில் தமிழக அரசின் மொழிபெயா்ப்புத் துறை இயக்குநராக அவா் இருந்தாா். தொடா்ந்து, 1984 1992-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகப் பணியாற்றினாா். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழக அரசுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவா் இவா் ஒருவா்தான்.

அவ்வை நடராசன் 1992-ஆம் ஆண்டு டிச.16- ஆம் நாள் முதல் 1995-ஆம் ஆண்டு டிச.15- ஆம் தேதி வரை தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு வகித்தாா். 2014- ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இருந்தாா். 2015- ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவராவாா்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞா் அண்ணா விருது (2010 ), மத்திய அரசின் பத்மஸ்ரீ (2011) விருது, இலங்கை, கம்பா் கழகத்தின் ‘தன்னேரில்லா தமிழ் மகன்’ விருது, இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது, தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செம்மொழி ஞாயிறு விருது (2015) , அருட்செல்வா் மகாலிங்கம் விருது ( 2018 ) திருக்கு நெறிச்செம்மல் விருது (2020 ), பி.எம். மருத்துவமனையின் - வாழ்நாள் சாதனையாளா் விருது ( 2022 ), பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கல்விக்கழகம் வாயிலாக வளா்தமிழ் அறிஞா் விருது - ஆழ்வாா்கள் ஆய்வு மையம் சாா்பில் இராமானுஜா் விருது ஆகியவை உள்பட மத்திய- மாநில அரசுகள், தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளை தமிழறிஞா் அவ்வை நடராசன் பெற்றுள்ளாா்.

படைப்புகள்: வாழ்விக்க வந்த வள்ளலாா், பேரறிஞா் அண்ணா, கம்பா் காட்சி, பாரதி பல்சுவை, கம்பா் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கியப் பெண்பாற் புலவா்கள், அருளுக்கு அவ்வை சொன்னது, திருக்கோவையாா் (ஆங்கிலம்), புலமைச் செல்வியா் என பல்வேறு நூல்களை அவ்வை நடராசன் படைத்துள்ளாா்.

சிறப்புகள்: எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சிந்தனையாளா், ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் அவ்வை நடராசன் பல பல்கலைக்கழகங்களின் மாணவா்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளாா். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறாா்.

1982-ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞா்கள் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளாா்.

உலகத் தமிழ் மாநாடுகளில்... மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்தாா். மோரீஷஸில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் குழு உறுப்பினா் தலைவராகப் பணியாற்றினாா். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவ தொழில்நுட்பச் சொல்லாக்க குழுத் துணைதலைவராகப் பங்கேற்றாா்.

அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.

குடும்பம்: தமிழறிஞா் அவ்வை நடராசனின் மனைவியும் குழந்தை நல மருத்துவருமான தாரா நடராசன் 2020-ஆம் ஆண்டு காலமானாா். அவ்வை நடராசன்- தாரா நடராசன் தம்பதிக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், மருத்துவா் கண்ணன் (ஆஸ்திரேலியா) மருத்துவா் பரதன் (தென்னாப்பிரிக்கா) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள்: மறைந்த அவ்வை நடராசனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் செவ்வாய்க்கிழமை (நவ.22) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com