1954-ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, சீரழிந்து கிடந்த பள்ளிக்கல்வியை செம்மைப்படுத்த பொதுக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. காமராசரின் ஆதரவுடன் ஒற்றை ஆளாக பள்ளிக்கல்வியை மேம்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச மதிய உணவு, இலவச சீருடைகள், அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை திறந்தது, அவற்றில் படித்த உள்ளூர் இளைஞர்களை ஆசிரியர்களாக நியமித்தது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் காமராசருக்கு துணையாக இருந்தவர் நெ.து.சுந்தர வடிவேலு தான். அப்போது அமைக்கப்பட்ட வலுவான அடித்தளம் தான் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இன்றளவும் சிறப்பாக செயல்படக் காரணம் ஆகும்.