
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது; உடனடியாக குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தி கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 29.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருந்தது. அதை நீதிமன்றங்கள் வாயிலாக தனியார் கல்லூரிகள் தகர்த்ததை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை.
இதையும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: இரு தீட்சிதர்கள் கைது
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் திருத்தப்பட்ட குறிப்பாணையை வெளியிடும் வரை இப்போதுள்ள கட்டணமே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆணையிட்ட நிலையில் இந்த கட்டண உயர்வு நீதிமன்ற அவமதிப்பாகி விடும்!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணமே ஏழை மற்றும் நடுத்தர மக்களால் எட்டிப் பிடிக்க முடியாதது எனும் நிலையில், அதை மேலும் மேலும் உயர்த்துவது நியாயமற்றது. பணக்காரர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்ற நிலையை அது உருவாக்கி விடும்!
தனியார் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்கள் பொருளாதார சுமையின்றி மருத்துவம் படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த கட்டண உயர்வு பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.