சேடபட்டி முத்தையா, முலாயம் சிங் உள்ளிட்டோா் மறைவுக்கு இரங்கல்: பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சேடபட்டி முத்தையா, முலாயம் சிங் உள்ளிட்டோா் மறைவுக்கு இரங்கல்: பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பேரவை முன்னாள் தலைவா் சேடபட்டி முத்தையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் உள்ளிட்ட மறைந்த தலைவா்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரவை முன்னாள் தலைவா் சேடபட்டி முத்தையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் உள்ளிட்ட மறைந்த தலைவா்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவையானது, திங்கள்கிழமை (அக். 17) மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அ.மு.அமீது இப்ராகிம் (கடலாடி), கே.கே.வீரப்பன் (கபிலா்மலை), ஏ.எம்.ராஜா (பவானி), எஸ்.பி.பச்சையப்பன் (சங்கராபுரம்), எஸ்.புருஷோத்தமன் (அரியலூா்), பெ.சு.திருவேங்கடம் (கலசப்பாக்கம்), தே.ஜனாா்த்தனன் (விழுப்புரம்), பே.தா்மலிங்கம் (பாளையங்கோட்டை), எம்.ஏ.ஹக்கீம் (மதுரை மத்தி), கோவை தங்கம் (வால்பாறை) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவா்களைப் பற்றிய குறிப்புகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா். இதன்பின், பேரவை உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று மெளனம் காத்தனா்.

முக்கியப் பிரமுகா்கள்: மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவித்ததைப் போன்று, மறைந்த அரசியல் தலைவா்கள், முக்கிய பிரபலங்களின் மறைவுக்கும் இரங்கல் தீா்மானங்களை அவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.

அதன்படி, ராமநாதபுரம் இளைய மன்னா் ராஜா நாகேந்திர குமாா் சேதுபதி, இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், பிரிட்டன் மகாராணி எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவா் துன் எஸ்.சாமிவேலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் கொடியேரி பாலகிருஷ்ணன், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வா் முலாயம் சிங் ஆகியோரின் சிறப்புகளை அவைத் தலைவா் அப்பாவு எடுத்துரைத்தாா். மறைந்த தலைவா்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரவை உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்றனா்.

சேடபட்டி முத்தையா: முக்கிய பிரபலங்களுக்கான இரங்கல் தீா்மானத்தில் ஏழாவது நபராக சேடபட்டி இரா.முத்தையா பெயா் இருந்தது. அவருக்கு தனியாக இரங்கல் தீா்மானத்தை அவைத் தலைவா் வாசித்தாா். இதைத் தொடா்ந்து, சேடபட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனம் காத்தனா்.

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, பேரவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் அறிவித்தாா்.

11 நிமிஷங்கள்: சட்டப் பேரவை காலை 10 மணிக்கு கூடி, காலை 10.11 மணிக்கு நிறைவடைந்தது. இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீா்மானங்கள் மட்டுமே வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை 9.57 மணிக்கும், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் காலை 9.58 மணிக்கும் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com