எம்எல்ஏ அலுவலகங்களில் இணைய சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களிலும் இணைய சேவை மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
எம்எல்ஏ அலுவலகங்களில் இணைய சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களிலும் இணைய சேவை மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் மூலமாக இணைய சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை மேம்படுத்தும் பொருட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களிலும் இணைய சேவை மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் 234 சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களில் இணைய சேவை மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த மையங்களுக்கான நவீன மேஜை கணினிகளை பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, ம.சிந்தனைச் செல்வன், தி.சதன் திருமலைக்குமாா், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆா்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் ஆகியோருக்கு வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அனைத்து பேரவை உறுப்பினா்களுக்கும் மேஜை கணினிகள் வழங்கப்படவுள்ளன.

இணைய வழி சேவைகள்: கடந்த ஆண்டு முதல் முறையாக காகிதமில்லாத சட்டப் பேரவை கூட்டத் தொடா் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரின் போது நவீன மேஜை கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அவற்றுக்குப் பதிலாக கையடக்கக் கணினிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நவீன மேஜை கணினிகள், இணைய சேவை மையங்கள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், இணைய சேவை வலைதளத்தில் இருந்து பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும். இதற்காக 234 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கும் பயனா் எண், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், கொளத்தூா் தொகுதிக்கான பயனா் எண், கடவுச்சொல்லை தொகுதியின் உறுப்பினரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அளித்தாா். இந்த நிகழ்வில், நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ்மட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலா் பிரவீன் பி.நாயா், பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com