
துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது என்று அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க- முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு
இந்த நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் குற்றச்சாட்டை முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். இதுகுறித்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. இதில் தவறு நடந்திருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரே.
துணைவேந்தர் நியமனத்தில் அதிமுக அரசுக்கோ, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கோ, எனக்கோ எந்த தொடர்புமில்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால் அவர் சொல்வதை ஏற்கலாம். 22 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்ததாக பன்வாரிலால் கூறுகிறார்.
இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் பணம் கை மாறி இருந்தால் அது முன்னாள் ஆளுநரையே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.